ஏத்தக்காரன் பாட்டுக்கு எதிர்ப் பாட்டில்லை

அறிமுகம்

அம்பிகாபதி - அமராவதி காதல் கதை அனேகமாகத் தமிழ் மக்கள் அனைவரும் அறிந்த ஒன்று. கவிச்சக்கரவர்த்தி கம்பரின் ஒரே மகன் அம்பிகாபதி. கம்பன் வீட்டுக் கட்டுத்தரியும் கவிபாடும் என்று பரவலான கருத்து தமிழ் மக்கள் அனைவரிடயேயும் நிலவுகையில் அம்பிகாபதியைப் பற்றிக் கேட்க வேண்டுமா?

தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும்

என்பார்கள் நம் முன்னோர்கள். இதன்பொருள் நம்மை விட நமது வாரிசுகள் அதிக அறிவு படைத்தவர்களாய் விளங்குவர் என்பதாகும்.

தம்மில் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்தில்
மன்னுயிர்கட் கெல்லா மினிது


எனும் குறளின்படி கம்பரும் தன் மகன் அம்பிகாபதி கவிதை புனைவதில் தன்னிலும் வல்லவனாயிருப்பது குறித்து அளவிலா மகிழ்வு கொண்டிருந்தார். கம்பர் ஒருநாள் ஒரு வயல்வெளியில் உலாவச்செல்கையில் அங்கு ஒருவன் ஏற்றமிரைத்து வயலுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டிருக்கக் கண்டார்.

ஏற்றமென்றால் ஒரு அகண்ட வாயுள்ள பாத்திரம். அதன் அடியில் ஒரு துளையிட்டு, அதில் கனமான துணியாலான, வளையும் தன்மையுள்ள ஒரு குழாய் இணைக்கப்பட்டிருக்கும். மூன்று சிறு கயிறுகளால் அப்பாத்திரம் வயலருகிலிருக்கும் கிணற்றின் உருளையின் மேல், உருளை உருளுகையில் நர்ந்து செல்லக்கூடிய நீளமான நீரிரைக்கும் கயிற்றின் ஒரு முனையுடன் இணக்கப் பட்டிருக்கும். நீரிரைக்கும் கயிற்றின் மற்றொரு முனை ஒரு மாட்டின் கழுத்திலோ அல்லது இரண்டு மாடுகளின் கழுத்துகளிலோ பொருத்தப்பட்ட மரக்கட்டையுடன் கட்டப்பட்டிருக்கும். மாடு கிணற்றை நோக்கிப் பின்னோக்கி நடக்கையில் பாத்திரம் கிணற்று நீருக்குள் அமிழ்த்தப்பட்டு அதில் நீர் நிறையும். அதன்பின்னர் மாடு முன்னோக்கி கிணற்றை விட்டு விலகும் திசையில் நடக்கையில் நீர் நிரம்பிய பாத்திரம் கிணற்றிம் மேல்மட்டத்திற்கு வந்து அதிலுள்ள நீர் துணியாலான குழாய் வழியே வயலுக்குச் செல்லும் ஒரு சிறு கால்வாயில் கொட்டும்.

அக்காலத்தில் பம்ப் போன்ற இயந்திரங்கள் இல்லையாதலால் ஏற்றமிரைத்தே வயலுக்கு நீர் பாய்ச்ச வேண்டும். இவ்வாறாக ஏற்றமிரைத்துக்கொண்டிருந்த ஏற்றக்காரன்

மூங்கிலிலை மேலே,, மூங்கிலிலை மேலே ...

என்று இரு வார்த்தைகளை மட்டும் இசையுடன் மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டே ஏற்றமிரைத்தான். அக்காலத்தில் மட்டுமன்றி இக்காலத்திலும் வயலில் பணிபுரிபவர்கள் அவர்கள் செய்யும் பணியைக் குறிக்கும் ஒரு நாட்டுப்புறப் பாடலை ஒன்று சேர்ந்து பாடிக்கொண்டே பணிபுரிதல் வழக்கம். அவ்வாறு பாடிக்கொண்டே பணி செய்கையில் களைப்புத் தெரியாது. இதைத்தான்

ஆடிப்பாடி வேலை செஞ்சா அலுப்பிருக்காது அதில்
ஆணும் பெண்ணும் சேராவிட்டா அழகிருக்காது ..


எனும் பின்னாளில் வந்த திரைப்படல் ஒன்று பண்ணோடு எடுத்துரைக்கிறது.

கம்பர் ஏற்றக்காரன் பாடிய நாட்டுப்புறப் பாடலை அதன் முன்னர் கேட்டாறியாதவராதலால் அவ்விரு வார்த்தைகளையே அடிக்கடி திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டிருந்தார். அவர் இவ்வாறு கூறக்கேட்ட அம்பிகாபதி

மூங்கிலிலை மேலே துங்கு பனி நீரே

என்று பாடலின் வரியைப் பூர்த்தி செய்யவே, கம்பர் அகமிக மகிழ்ந்து,

"ஏற்றக்காரன் பாட்டுக்கெதிர் பாட்டில்லை,
என் அம்பிகாபதிக்கு நிகர் யாருமில்லை"


என்று பாராட்டி மகிழ்ந்தார்.

மூங்கிலிலை மேலே தூங்குபனி நீரே
தூங்கு பனி நீரை வாங்கும் கதிரோனே


என்று தொடங்கும் ஒரு அருமையான திரைப்படப் பாடலொன்றை கவிஞர் கண்ணதாசன் இதிலிருந்து எழுதியுள்ளார்.

(தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயுமல்லவா?) கவிச் சக்கரவர்த்திக்கு நம் தமிழ்க் கவிஞர்கள் அனைவரும் வாரிசுகளல்லவா?

தொடரும்........

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home